இலங்கையில் பணத்தின் பௌதீக பாவனையை குறைக்கும் முயற்சியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டண முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் இன்று அமைச்சரவையில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி கட்டண முறையை விரிவாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் அனைத்து அனுமதி பெற்ற நிறுவனங்களுடனும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகளில் ஒன்றாக, சாலை அபிவிருத்தி அதிகார சபையால் நிர்வகிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்தும் கவுண்டர்களுக்கு LANKAQR முறையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் தமது கையடக்க தொலைபேசியில் LANKAQR செயலிலை செயற்படுத்துவதன் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து 8-10 வினாடிகளுக்குள் செலுத்த வேண்டிய பயணக் கட்டணத்தை செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
LANKAQR குறியீடானது, இலங்கை மத்திய வங்கி (CBSL) உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் LankaClear (Pvt) Ltd ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்கும் அதேவேளையில் குறைந்த பௌதீக பண பாவனையை உடைய சமூகத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.