இலங்கையில் 2021 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இருந்து மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளதாக இங்கிலாந்தின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைமை குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் ஜூன் 31 வரை 31 நாடுகளில் மனித உரிமை தொடர்பான மதிப்பீடுகளை இங்கிலாந்தின் பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
“ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் ஜனவரி 2021 வெளியிட்ட இலங்கை பற்றிய அறிக்கையில், ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது இலங்கையில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது’
என்று இங்கிலாந்தின் அறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் பாதுகாப்புப் படைகள் மனித உரிமை ஆர்வலர்களை கண்காணித்தல் மற்றும் மிரட்டல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துதல், பல தன்னிச்சையான கைதுகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குறித்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புகள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலம் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஓரங்கட்டுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உலகளாவிய மனித உரிமை நிலைமையின் மதிப்பீட்டை வழங்குவதோடு, உலகெங்கிலும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முயற்சியை பிரதிபளிக்கிறது.
மனித உரிமைகள் தொடர்பான சரியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று இங்கிலாந்து நம்பிக்கை வெளியிட்டுள்ளது.