என்னை கொலை செய்ய முயற்சித்த விவகாரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் தான் ரணில் விக்கிரமசிங்க தப்பினார் என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க மீது என்னால் முறைப்பாடு செய்திருக்க முடியும். எனினும் அந்த விடயத்தை விட்டு விடுங்கள் என பிரதமர் என்னிடம் கேட்டுக் கொண்டதாலேயே ரணில் மீது முறைப்பாடு செய்யவில்லை என அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான செலவின தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் பழிவாங்கப்பட்டோம். முதற் 10 திருடர்கள் என அப்போதைய ஆளுந்தரப்பினர் தொடர்பில் நான் முறைப்பாடு செய்து இரண்டு வருடங்களாகின்றன.எனினும் இதுவரையில் ஒருவரிடமிருந்து கூட வாக்குமூலம் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ள உறுப்பினர் ஒருவர் தொடர்பில் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து வாக்குமூலம் வழங்கினால் பிணை கூட வழங்காது அவரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அந்த முன்வரிசை உறுப்பினர் மட்டுமல்ல அவரது முழுக் குடும்பமும் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை கொலை செய்ய முயன்றார் என முறைப்பாடு செய்திருந்தால் ரணிலும் கைது செய்யப்பட்டிருப்பார் என்று குறிப்பிட்டார்.
அப்போது பொலிஸு க்கு பொறுப்பான அமைச்சராக இருந்த சாகல ரத்னாயக்க பாதாள உலகத்திற்கு உதவினார். ஆனால் பாதாள உலகத்தை ஒழித்தது கோத்தபாய ராஜபக்ஷ தான் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.