July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள்’

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் மூலம் சகல மக்களும் அரசியல், சமூக, பொருளாதார சமத்துவத்தை பூரணமாக அனுபவிக்கும் காலத்தை நாம் உருவாக்குவோம் என சபையில் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காட்சிகளை நிறம் மாற்றி காட்டும் அரசியல் கண்ணாடிகளை கழற்றி விட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வரவேண்டும் எனவும் கூறினார்.

எத்தகைய தடைகளையும் சவால்களையும் அரசியல் குழப்பங்களையும் எதிர்கொண்டு, சமூக பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப எமது ஆட்சி திடசங்கற்பம் பூண்டுள்ளது. சகல இன, மத, சமூக மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ சிந்தனையை நடைமுறைப்படுத்தவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தை ஜனாதிபதி பிரகடனம் செய்திருக்கிறார் என்றார்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அவ்வாறான நிலை மாறி பரந்த வெளிச்சம் கூட மருண்டவன் கண்ணுக்கு பேயாக தெரியும் காலமாக இது மாறியிருக்கிறது. எமது தேசத்தின் மக்களது ஆரோக்கியமான வாழ்க்கையை முன்வைத்து, ஜனாதிபதி எடுத்து வருகின்ற முயற்சிகளை நான் ஒரு மக்கள் நேய நோக்கமாகவே பார்க்கிறேன்.

இரசாயன உரம் மற்றும் விவசாய உள்ளீடுகள் மற்றும் சுத்தமற்ற குடிநீர் காரணமாக எமது நாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் ஒரு வருடத்தில் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 125,000 க்கும் அதிகமானவர்கள் சிறுநீரக நோயாளர்களாக மாறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கத்தில் இத்தகைய நோய்களற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு இந்த இயற்கை உரப் பயன்பாடு வழிவகுப்பதுடன், மறுபக்கத்தில் அதிகளவிலான அந்நியச் செலாவணியை மீதப்படுத்தவதற்கும் எம்மால் இயலுமாகின்றது.

இத்தகைய முயற்சிகள் தேசிய உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீர் என்ற திட்டமும் அதற்கான முன்னெடுப்புகளும் நோயற்ற நாடாக இலங்கையினை உருவாக்கும் என்றார்.