”அமெரிக்க இராஜாங்க செயலாளரின் விஜயம் இலங்கைக்கு மதிப்பைக் கொண்டுவர வேண்டுமே தவிர பாதிப்புகளையும் சிக்கல்களையும் அல்ல” என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அவரின் விஜயத்தின் ஊடாக இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு பொருந்தாத அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என்று மேலும் தெரிவித்துள்ளது.
மைக்கல் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பாக சீன தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை,இலங்கை கொவிட் 19 தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தருணத்திலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளரின் பயணம் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு உயிரிழந்துள்ள நேரத்தில், பொம்பியோவின் விஜயத்துக்கு முன்னர் பெருமளவான அரச பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவது சுகாதார நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாகும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது, உள்நாட்டு எதிர்பார்ப்புகளுக்கு தன்னிச்சையான வகையில் தலையீடுகளை செய்யக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி செயலாளர் டீன் தொம்சன், இலங்கையானது அதன் வெளிநாட்டு உறவுகளை தேவையறிந்து தெரிவு செய்ய வேண்டும் என்று விடுத்துள்ள அறிவித்தல் தொடர்பாக குறிப்பிட்டுள்ள சீன தூதரகம், இந்த அறிவித்தல் சீன- இலங்கை இராஜதந்திர உறவை பாதிக்கச் செய்யும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளது.