இலங்கையில் சமீப நாட்களாக முட்டையின் விலை உயர்வடைந்து வருவதாக சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முட்டையின் மொத்த விற்பனை விலை அதிகரிக்கப்பட்டதால் 23 முதல் 25 ரூபாய் வரையான சில்லறை விலையில் முட்டை ஒன்றினை விற்பனை செய்யவேண்டி ஏற்பட்டுள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (23)மாலை வரை வெள்ளை முட்டை ஒன்று மொத்த விலையில் 22 ரூபாவிற்கும் சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விலை 23 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் முட்டை ஒன்றை தலா 21 ரூபாவிற்கு வழங்க முடியும் என கொழும்பு பிரதேசத்திற்கு முட்டைகளை விநியோகிக்கும் முட்டை உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் 460 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்று 660 முதல் 710 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
முட்டை மற்றும் கோழி இறைச்சி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கோழிப் பண்ணையுடன் தொடர்புடைய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.