கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையை நடத்தியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை மனிதப் படுகொலைகளாகக் கருதுவதாகவும் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
படகுப் பாதை விபத்தை சிலர் அரசாங்கத்தின் குற்றமாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால நிர்மாணப் பணிகளின் போது பயன்படுத்துவதற்கு குறுக்குவழிப் பாதையொன்று வழங்கப்பட்டிருந்தாலும், பாதை 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டதால் மக்கள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் பாலத்தை அமைப்பதற்காக மக்கள் வாக்கைப் பெற்றாலும், பாலத்தை அமைத்துக் கொடுக்கவில்லை என்றும் தாமே புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பில் உள்ள சபை மூலம் படகுப் பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை அழைத்துச் செல்லும் போது உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருக்கவில்லை என்று பொலிஸ்மா அதிபர் கூறியதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.