பீடைக் கொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தலை தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தமைக்காக பீடை கொல்லிகள் பதிவாளர், பேராசிரியர் ஜே.ஏ சுமித் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கிளைபோசேட் உள்ளிட்ட 5 பீடை கொல்லிகளை பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று (22) அவர் வெளியிட்டிருந்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, ரிடீமாலியத்த, கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள்ளும் குறிப்பிட்ட விவசாய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதையோ, விற்பனை செய்வதையோ தடை செய்கின்றது.
எனினும் இந்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டதன் மூலம் கிளைபோசேட், ப்ரோபனில், கார்பரில், சோலோபைரிஃபோஸ் மற்றும் கார்போஃப்யூரான் ஆகிய பீடை கொல்லிகளை பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பீடை கொல்லி பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தற்போது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முந்தைய வர்த்தமானி செல்லுபடியாகும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.