பெண்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கடுமையாக எச்சரித்துள்ளார்.
இனியும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டால் நிலையியல் கட்டளைக்கு அமைய கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் போது, மரக்கறி விலைகள் தொடர்பில் குறிப்பிடுகையைில்,எதிர்க்கட்சி எம்.பி, ரோஹினி குமாரியின் பெயரையும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவியின் பெயரையும் பயன்படுத்தி இரட்டை அர்த்தத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் ரோஹினி குமாரி எம்.பி உள்ளிட்ட பாராளுமன்ற மகளிர் அமைப்பினர் சபாநாயகரிடம் முறையிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் இன்று சபாநாயகர் சபையில் அறிவித்து, திஸ்ஸ குட்டியாராச்சியை எச்சரித்தார்.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினரான தலதா அதுகோரல, இந்த விடயம் தொடர்பில் திஸ்ஸ குட்டியாராச்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எனினும் தான் வெளியிட்ட கருத்தில் எந்த தவறான அர்த்தமும் கிடையாது என்றும், அதனை தவறாக சிலர் புரிந்துகொண்டதற்கு தான் பொறுப்பல்ல என்றும் திஸ்ஸ குட்டியாராச்சி கூறியுள்ளார்.
இதனால் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் மன்னிப்புக் கோர மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.