July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் நினைவேந்தல்; பொலிஸாரின் விண்ணப்பங்கள் சாவகச்சேரி, மல்லாகம், பருத்தித்துறை நீதிமன்றங்களால் தள்ளுபடி

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களை சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கட்டளையிட்டன.

“விண்ணப்பங்களில் பிரதிவாதிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளோர் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை மற்றும் கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும்.எனினும் குற்றமிழைக்கப்படலாம் என்ற அடிப்படையில் தடை உத்தரவு கட்டளை வழங்க முடியாது” என்று விண்ணப்பங்கள் நீதிவான் நீதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற எல்லைக்குள் உள்ள இரண்டு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட 8 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற எல்லையில் உள்ள 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

குற்றவியல் நடவடிக்கை சட்டத்துக்கு அமைவாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியிருந்தனர்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொதுமக்களை அணிதிரட்ட முடியாது என்றும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

விண்ணப்பங்களின் பிரதிவாதிகளாக அரசியல் கட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமகன்கள் சிலர் பெயரிடப்பட்டிருந்தனர்.

மாவீரர் நாள் நினைவேந்தலை அனுமதித்தால் பெரும் ஆபத்து என்று பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் விண்ணப்பங்கள் அடிப்படையற்றவை என்றும் மன்று தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிமன்றங்கள், குற்றவியல் நடவடிக்கை சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்று சுட்டிக்காட்டி விண்ணப்பங்களை நிராகரித்தன.