
இலங்கை வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் தரையிறங்குவதற்கு முன் ஒன்லைன் ஊடாக ‘சுகாதார சுயவிபர படிவத்தை பூர்த்தி செய்யுமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் உடல்நலப் பரிசோதனையை எளிதாக்குவதற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்தில் ஏறும் முன், பயணம் செய்யும் போது (விமானத்தில் இணைய வசதி இருந்தால்) அல்லது விமான நிலையத்தில் தரையிறங்கிய பின், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளமான https://www.airport.lk/health_declaration/index ஐஅணுகுவதன் மூலம் தங்கள் விவரங்களை சமர்ப்பிக்கலாம்.
குறித்த படிவத்தை, ஆங்கிலத்தில் துல்லியமாகவும் முழுமையாகவும் நிரப்புமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பயணிகளை கேட்டுக் கொள்கிறது.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் பயணிகள் QR குறியீட்டை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு மூலம், பயணிகளின் உடல் நிலை குறித்த தகவல்கள் கண்காணிக்கப்பட முடியும்.
தொடுதல் மற்றும் காகிதமில்லா தொழில்நுட்பத்திற்கு நகரும் முதல் படியாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் கொவிட்-19 சுகாதாரப் பிரகடன அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி படிவங்கள் நிரப்பப்பட வேண்டும். பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இது பயணிகளை கையாளும் செயல்முறையை எளிதாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.