வடக்கு, கிழக்கு என எந்தப் பகுதியையும் தமது அரசாங்கம் பிரித்துப் பார்க்கவில்லை என்றும், அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே அளவான நிதியையே வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாகவும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் அந்தப் பகுதிக்காக வேலைத்திட்டங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் நாங்கள் முழு இலங்கையையும் ஒன்றாகவே பார்க்கின்றோம் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 14021 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரே முறையிலேயே நிதி ஒதுக்கியுள்ளோம். இதில் இன, மத, கட்சி பேதங்கள் இல்லை எனவும், எங்களுடன் இருக்கின்றனரா, இல்லையா? என்பது முக்கியமில்லை. அனைவரையும் ஒன்றாகவே பார்க்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.