மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 5 பேருக்கு கடந்த 19 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி இரவு வரை நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் ஒன்றிணைப்பின் கிழக்கு மாகாண தலைவர் சிவயோகநாதன் சீலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா,; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் யோகராசா தர்மிதன் என்பவர்களுக்கே இவ்வாறு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2 பிரிவின் கீழ் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.பி. கெட்டியாராச்சி நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.