File Photo
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 153 பேர் ஆதரவாகவும், 60 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
நிதி அமைச்சரான பஸில் ராஜபக்ஷவினால் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் 13 ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 5.10 மணிக்கு அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் அரசாங்க தரப்பினரும், எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தை ஆதரிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் சிலரும் அடங்கலாக 153 பேர் அதனை ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 60 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து 10 ஆம் திகதி மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.