மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்று 79 ஆவது வயதில் காலமானார்.
மூத்த ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் உதயன் பத்திரிகை 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப் பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், இவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேவேளை, ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் யாழ். ஊடக அமையத்தினால் இவர் கௌரவிக்கப்பட்டார்.