இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 15 முதல் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
வைரஸ் பரவல் நிலைமைகள் தொடர்ந்தும் மோசமடையுமானால் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய புதிய வைரஸ் பிறழ்வு காரணமாக சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் மீண்டும் வேகமாக கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது, நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் செயற்பாடுகள் பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்ற எண்ணப்பாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறுகின்றமை அதிகமாக அவதானிக்கப்பட்டுவரும் ஒரு காரணியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை எத்தனை தடவைகள் ஏற்றிக்கொண்டாலும், அவற்றை விடவும் வைரஸின் வீரியம் அதிகமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் செயற்பாடுகள் காரணமாக வைரஸ் காவிச்செல்லப்பட்டு, ஏனையோருக்கு பரவும் சாத்தியப்பாடுகள் அதிகமாக இருப்பதாகவும் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் நாட்டை முடக்கும் நிலைமை ஏற்பட்டால், மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
“நாட்டில் கொவிட் வைரஸ் பரவலானது 15-20 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இறுதியாக கிடைக்கபெற்ற சுகாதார தரவுகளுக்கு அமைய யாழ்ப்பாணம், குருணாகல், அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளது”
என்று வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.