November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதிக்கு இறங்கிய நுவரெலியா விவசாயிகள்!

பெரும் போகத்திற்கு தேவையான இரசாயன உரம் உள்ளிட்ட விவசாய பொருட்களை வழங்குமாறு கோரி, நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச விவசாயிகளுடன் இணைந்து பௌத்த தேரர்களும் இந்த ஆர்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி, பதுளை – நுவரெலியா பிரதான வீதியினூடாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்னால் சென்றடைந்தது.

அந்த இடத்தில் இரண்டு மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இரண்டாயிரம் பேர் வரையில் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்திடம் உரம் உள்ளிட்ட பொருட்களை கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா, கந்தபளை, மீபிலிமான, நானு ஓயா, ஆகிய நகரங்களில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இதனால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளும் தடைபட்டிருந்தன.

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை சாதாரண விலைக்கு வழங்க வேண்டும், பூச்சிக்கொல்லிகளை வழங்க வேண்டும், நியாயமான விலையில் திரவ உரத்தை வழங்க வேண்டும், உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்படி பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், தற்போது பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளை சந்தைக்கு விடுவிப்பதில்லை என்று ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார வலய மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கோரி நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் கையளித்தனர்.

This slideshow requires JavaScript.