யாழ்ப்பாணம், அரியாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப் பொருள்கள் உட்பட பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடற்படையினர் இன்று காலை, அரியாலை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது கரைக்கு கொண்டு வர முடியாமல் டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த கஞ்சாவின் பெறுமதி 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.