
சுமந்திரனின் சட்டப் புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும், மாவீரர் தினத்தில் அறைகளுக்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்றனர் என்று அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டிய தருணம் வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவிற்குள் நினைவேந்தலைசெய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்றும், சுமந்திரன் போன்றோரின் சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை எனவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று கலந்துரையாட வேண்டும் என அவர் குறிப்பிடடுள்ளார்.