
இரண்டு வருடங்களாக சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தும் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள முழுமையான ஊழியர்கள் மற்றும் வாகன எண்ணிக்கை என்பன, நல்லாட்சிக் காலத்திலிருந்த ஊழியர் மற்றும் வாகன எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வாகனப் பேரணி நீண்டதாக இருக்கின்றது என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி வெளியிட்டிருந்த கருத்தொன்று தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, குறிப்பிட்ட விடயங்கள் உண்மைக்குப் புறம்பானதும் சரிவர ஆய்வு செய்யாமலும் முன்வைக்கப்பட்டவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டும். அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய வாகனத்தைக்கூட பயன்படுத்தாது, கடமைக்கு ஏற்ற வகையில் பட்டியலில் உள்ள வாகனங்களையே குறித்த கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், சந்திம வீரக்கொடி உண்மையான விடயத்தை அறியாது, இவ்வாறு தவறான தகவல்களை முன்வைப்பது வருந்தத்தக்க விடயமாகுமென ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.