July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”13 ஆவது திருத்தம், ஒற்றையாட்சியை தீர்வாக ஏற்க மாட்டோம்”: சபையில் கஜேந்திரன்

13 ஆவது திருத்தத்தையோ ஒற்றையாட்சியையோ நாம் ஒருபோதுமே தீர்வாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களது உரிமைக்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம். எனவே அரசு தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும். புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் தமிழ் தேசத்துக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கஜேந்திரன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.

2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இதுவரை 13 வரவு செலவுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ் தேசத்தை முற்றாக புறக்கணித்தே தயாரிக்கப்பட்டிருந்தன. அதே போன்றுதான் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமும் அமைந்துள்ளது என்று அவர், விவாதத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தேசம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டது மட்டுமன்றி, ஒடுக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன எனவும், இதற்கு பாதுகாப்பு அமைச்சினுடைய முப்படைகள் ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, மற்றும் பௌத்த கலாசாரதிணைக்களம்,மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை .எல்லைநிர்ணய சபை ,வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்புத்திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், மீன்பிடி அமைச்சு, துறைமுக அபிவிருத்திஅதிகாரசபை, வெளிநாட்டு அமைச்சு, வர்த்தக அமைச்சு போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் போராளிகள் மீதான ஒடுக்குமுறைகள், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல்கள் ஆகிய செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், எங்களது தமிழ் தேசத்தை முழு மையாக பௌத்த தேசமாக்குகின்ற நோக்கத்தோடுதான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.