இலங்கையில் பல பொருளாதார வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
போஞ்சி, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவை வரலாறு காணாத வகையில் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, போஞ்சி கிலோ ஒன்று 300 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 200 ரூபாவிற்கும்
லீகஸ் ஒரு கிலோ 300 ரூபாவிற்கும், தக்காளி ஒரு கிலோ 300 ரூபாவிற்கும் விற்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்தோடு திங்கட் கிழமை முதல் நுவரெலியா விவசாயிகள் மரக்கறி அறுவடை செய்வதை நிறுத்த உள்ளதாகவும் பேலியகொட மெனிங் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
உர பற்றாக்குறையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதால் இவ்வாறு விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, நாட்டில் அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் டிசம்பர் 3 ஆம் வாரம் வரை தொடரலாம் என கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு சமைத்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
எனினும் உலகளாவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் ஜனவரி மாதத்துக்குப் பிறகு அத்தியாவசிய ருட்களின் விலை குறையும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.