September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியானால் செய்ய வேண்டியது என்ன?

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 6 மாதங்களுக்கும் அதிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திங்கள் முதல் அனைத்து வகுப்புகளையும் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து பாடசாலைகளில் பின்னபற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் நேற்று (19) இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, மாணவர்களுக்கு கொவிட் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில்  அல்லது கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டாலோ பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மாணவர்களுக்கு கொவிட் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்களும் 10 முதல் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 நாட்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் 14 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் இருந்தும் வீடுகளில் யாராவது ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டாலோ மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.