மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் தொடர்புபட்ட நிறுவனத்தின் சொத்துக்களை அரசுடமையாக்கியதைப் போன்று, நிதி அமைச்சரின் மள்வானை வீட்டை அரசுடமையாக்கவும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பேர்பெச்சுவல் நிறுவனத்தின் 8.5 பில்லியன் ரூபாய் சொத்துக்களை அரசுடமையாக்கும் நிதி அமைச்சரின் யோசனையை ஜேவிபி தலைவர் பாராட்டியுள்ளார்.
எனினும், அத்தோடு நின்றுவிடாமல் நிதி அமைச்சரின் மள்வானை வீடு மற்றும் பென்டோரா பத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சொத்து விபரங்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பென்டோரா விடயத்தில் 35 பில்லியன் ரூபாய் பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மிக்க அரசியல் முறை தோற்கடிக்கப்படுவதிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.