July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும்’

அரசாங்கத்துடன் இணந்து எமது மக்களுக்காக செயற்படுகின்றேன். எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும். கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகின்ற அளவிலே அரசாங்க நிர்வாகம் செயற்படக்கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

நான் பாராளுமன்றத்துக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. ஆனால் எமது மக்களின் பிரச்சினைகளை ,எங்களது கருத்துக்களை இந்த சபையில் கூற முடியாதளவுக்கு எமக்கான நேரம் மட்டுப்படுத்தப்படுகின்றது.நான் இங்கு பல விடயங்களை பேச வேண்டி உள்ளபோதும் அதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பொறுப்பை பாராளுமன்றத்தை வழிநடத்துபவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கை மையப்படுத்தும் எம்.பி.க்கள் எல்லோரும் கடும் போக்கான தொனியில் தான் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் நோட்டிஸ் ஒட்டி, முதலமைச்சராகி இன்று எம்.பி.யாகவுள்ளேன். அரசாங்கத்துடன் தான் இணந்து செயற்படுகின்றேன்.எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகிற அளவிலே அரசாங்க நிர்வாகம் செயற்படக்கூடாது.அரசாங்கத்துடன் இணைந்துள்ள எங்களின் தனித்துவமான அரசியலை வளர்த்தெடுக்கக்கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்கித்தர வேண்டும் என்றார்.