“இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராகவே உள்ளன. அதனை சிந்தித்து சரியான மாற்று சிந்தனை உருவாகவில்லை என்றால், இலங்கையாக முன்னோக்கி பயணிக்க முடியாது” என்று எச்சரித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூச்சியமாகவே மாறும்” எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை ஒற்றையாட்சி, சிங்கள பெளத்த நாடு என்ற சிந்தனையில், ஏனைய இனத்தவரை எதிரியாக கருதும் மனநிலையில் ஆட்சியாளர்கள் இனியும் பயணிப்பார்களானால் ஒருபோதும் இலங்கை நாடாக மீள முடியாது. அதேவேளை, யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக வடக்கு, கிழக்கு பகுதிகளை கைவிட முடியாது.இந்த நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வடக்கு, கிழக்குக்கும் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக ஏனைய மாகாணங்களை விடவும் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். 35 ஆண்டுகள் பின் தள்ளப்பட்ட நிலையிலே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளன.
போர் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக வடக்கு, கிழக்கு பகுதிகளை நீங்கள் கைவிட முடியாது.சமமாக சகல பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அரசு கைவிடும் நிலைமையே உள்ளது.
வடக்கு, கிழக்கில் பிரதான மூன்று பொருளாதார நிலைகள் உள்ளன. மீன்பிடி, விவசாயம் மற்றும் வர்த்தகம் சார்ந்ததாகும்.மீன்பிடியைப் பொறுத்தவரையில் ஏனைய மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதுடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி நடைமுறைகளைக் கையாண்டு எமது மீனவர்களின் உடைமைகளை அழித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியையும் கடற்படையினரால் தடுக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் அரசு இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல், விவசாயத்துக்கும் இதுவே இடம்பெற்றுள்ளது.எமது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்தது.இப்போது வனப் பாதுகாப்பு திணைக்களமும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. திட்டமிட்ட வகையில் வடக்கின் இன பரம்பலை மாற்றியமைக்கும் சூழ்ச்சியை அரசு முன்னெடுத்து வருகின்றது.இதனை நாம் சுட்டிக்காட்டுகின்ற வேளையில் நாம் இனவாதிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றோம்.
அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி என்பவற்றை காரணம் காட்டி வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ளவர்கள் எமது பகுதியில் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.இது மக்களின் சமநிலை தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.ஆகவே எமது மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
74 ஆண்டுகால இலங்கையில் இன்று சிங்கள மக்களே நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எண்ணி வெட்கப்பட வேண்டும்” என்றார்.