ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையையும் விடவும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பொறியியலாளர் கபில ரேணுக பெரேரா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி அமைச்சரவை அமைச்சர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர்கள் நால்வரும் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, 30 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முடியும் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, செயற்படாத ஜனாதிபதி, அரசியலமைப்பினூடாக அமைய செயற்படத் தவறியுள்ளதாக உத்தரவிடக் கோரி சட்டத்தரணி தர்ஷன வேரதுவவினூடாக அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 82 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.