நீண்ட வார இறுதி நாட்களில் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காது பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாட்டை இன்னொரு பூட்டுதலுக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் சுகாதார விதிகளை மறந்து ஒன்றுகூடலில் ஈடுபட்டால் நாடு ஒரு புதிய கொவிட் அலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
ஏற்கனவே நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
“பொறுப்பற்ற மற்றும் அறியாமை நடத்தையின் விளைவுகளை இரண்டு வாரங்களுக்குப் பிறகு உணர முடியும். அவ்வாறான நிலையில் பூட்டுதல் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று ரோஹன கூறினார்.
இதே நிலைமை நீடித்தால் ஆறு மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே நாட்டில் நேற்று (18) மேலும் 737 பேர் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 554,459 ஆக உயர்ந்துள்ளதுடன், வைரஸால் பாதிக்கப்பட்ட 14,827 நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளான 14,072 பேர் உயிரிழந்துள்ளனர்.