இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்து வரும்
நிலையில், இன்றைய தினத்தில் 110 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள 8413 தொற்றாளர்களில் 4,043 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை 32 வைத்தியசாலைகளில் 4,354 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று
வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுள்ளோரில் மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.
குருநகருக்கு செல்லத் தடை
யாழ்ப்பாணத்தில் குருநகர், பாசையூர் ஆகிய பகுதிகளுக்கு வெளியில் இருந்து யாரும்
உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று குருநகர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் இருந்து
ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, அப்பகுதியைச்
சாராத வெளிநபர்கள் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியங்கள் மூடப்பட்டன
நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில்
மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடந்து வருவதற்கும் தடை
கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடத்துக்கு,
நடந்துவருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர்,
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில், பஸ் நிலையங்கள் இயங்காது
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பகுதிகளுக்கு நடந்துச் செல்வது ஊரடங்கு உத்தரவை மீறுவதாகக்
கருதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகக்கவசம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்
ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே ஒரு முகக் கவசத்தை
அணிந்திருக்க வேண்டும் என்றும், பின்னர் புதிய முகக் கவசத்தைப் பயன்படுத்த
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார மேம்ட்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் உத்பலா
அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தொழிலுக்குச் செல்பவர்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக வெளியே
செல்பவர்கள், தாம் அணியும் முகக் கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த
வேண்டும் என்றும் பின்னர் புதிய முகக் கவசத்தையே அணிய வேண்டும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
எனவே, வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக் கவசங்களை கொண்டு
செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்ட ஹட்டன் நகரம்
உடன் அமுலுக்குவரும் வகையில் ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஹட்டனில் இதுவரையில் 10 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து,கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்
நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவில் வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக
நிலையங்களும் இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை
மூடப்பட்டிருக்கும் என்று பிரதேச சபையின் தவிசாளர் செண்பகவள்ளி
தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
மஸ்கெலியா கங்கேவத்த பகுதியில் பேலியகொடை மீன் சந்தையோடு
தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்
அவரது மனைவிக்கும் இன்று (27) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் தனிமைப்படுத்தலில் 35,000 பேர்
நாடளாவிய ரீதியில் 35,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இதுவரை 185,000 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தவிர்ப்பதற்காக, தேவையற்ற
பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவர்
அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார பணிப்பாளர் பதவியில் மாற்றம்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக, மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.