July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பெரும் வறுமையை நோக்கி இலங்கை பயணிக்கிறது’: எதிர்க்கட்சி கவலை

சர்வதேச ஒத்துழைப்பும், அதற்கான வேலைத்திட்டமும், மனித உரிமைகளை பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி மட்டுமல்ல வறுமையின் பக்கம் நாடு பயணிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனக் கூறினாலும், நாட்டில் சட்டம் என்பது இல்லாமல் போயுள்ளதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

“நிதி அமைச்சருக்கு ஏழு மூளைகள் இருப்பதாக கூறினார்கள். அரசியல் அமைப்பையும் மாற்றி அதிகாரத்தை கைப்பற்றினர்.

அவ்வாறான நிலையில் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் மோசமான, தோல்வி கண்ட வரவு செலவு திட்டமாகும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

சட்ட விரோதமாக பல விடயங்களை இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்”

என்று இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.