July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் துறையினருக்கான கொவிட் கால சம்பள நடைமுறை டிசம்பர் வரை நீடிப்பு

கொவிட் காலப்பகுதியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறை  தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை காலத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் அதனை நீடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண் சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பாக, தொழில் வழங்குனர்கள், தொழிற்சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியால் கடந்த மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் செயற்படுத்தவென பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

• கொவிட் 19 தொற்றால் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்களை தொழிலிலிருந்து நீக்காமல் இருத்தல்.

• சமூக இடைவெளியைப் பேண வேண்டியிருப்பதால், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்துவதற்கு இயலாது போவதால், ஊழியர்களை நேரசூசி அடிப்படையில் அல்லது வேறு பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி சமமாக பணிபுரியும் வகையில் பணியில் அமர்த்துதல்.

• வேலை இல்லாததால் ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிடுவதால், நிறுவன ஊழியர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தல்.

• அவ்வாறு செலுத்தும் சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான செலுத்தல்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொவிட் 19 தொற்று நாட்டில் பரவி வரும் நிலைமையில், அந்த நடைமுறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை செயற்படுத்த  குறித்த செயலணி உடன்பாடு தெரிவித்துள்ளதாக தொழில் அமைச்சர் முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்ட அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியதாக, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.