July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளக முரண்பாடுகளை கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்துக்காக அர்ப்பணிக்கவும்; கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு

யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914 ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரிய வந்தது.

நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் பயணத்துக்கு தடையாக அமையும் என நேற்று முன்தினம் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

உள்ளக முரண்பாடுகளை கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்து செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கவனக்குறைவாக மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேக்கோனுக்குப் பணிப்புரை விடுத்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய இளைஞர் சேவை தனியார் நிறுவனம் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமை குறித்து கேள்வியெழுப்பினார்.

இந்த அறிக்கைகள் யாவற்றையும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பணிப்புரை விடுத்தது.

அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய மாத்தறை நில்வளா இளைஞர் பூங்காவை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படாமை குறித்தும் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு மற்றும் வட்டியாக 2014 டிசம்பர் 31 ஆம் திகதி 142,810,543 ரூபா வழங்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு ஆலோசனைக்கான கட்டணமாக 7,657,349 ரூபா செலுத்தப்பட்டமை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.