இலங்கை மக்களில் நால்வரில் ஒருவர் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாடு ஒன்றுக்கு இடம்பெயர விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் பாலிசி நடத்திய இந்த ஆய்வில் பயமுறுத்தும் வகையிலான சில ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையின்படி, நாட்டில் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகமையை கொண்ட இளைஞர்களில் 53 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அவர்களில் 20% பேர் இதற்காக ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்கள், 29% பேர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு ஆய்வின் போது, கணக்கெடுக்கப்பட்ட ஆண்களில் 34 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தை கொண்டுள்ளதாகவும் அவர்களில் 24 வீதமானவர்கள் ஏற்கனவே அதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 20 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
அதேபோல், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில், 22 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகவும் இவ்வாறு விரும்புபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 22 வீதமானவர்கள் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் இலங்கையர்களின் வெளிநாடு செல்வதற்கான விருப்பங்கள் இரட்டிப்பாகியுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் உயர்கல்விக்கு தகுதி பெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வரிசையில் நிற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்த கருத்தை இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.