இலங்கையில் மீண்டும் கொவிட் அலை உருவாகி, நாட்டை முடக்கினால் எதிர்க்கட்சியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் வைரஸ் தொற்றை ஒழிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகையில், இலங்கையில் எதிர்க்கட்சி வைரஸுடன் இணைந்து அரசாங்கத்தை ஒழிக்க முயற்சிக்கின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களினால் மீண்டும் தொற்று அலை ஏற்பட்டு, நாடு முடக்கப்பட்டால் அதன் பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் பொலிஸார் தமது கடமைகளை முறையாக செய்கின்றனர் என்றும், இவர்களின் கௌரவத்தை சீர்குலைக்கும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.