உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ரைகம, பண்டாரகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது மருத்துவ சாதன உற்பத்தி ஆலையான “ஃப்ளெக்சிகேர் லங்கா” நிறுவனத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“இந்த நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படுவதன் மூலம் 2000 இலங்கையர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உருவாகும்” எனவும் நிதி அமைச்சர் இதன்போது கூறினார்.
இதேவேளை, திறந்து வைக்கப்பட்டுள்ள ஃப்ளெக்சிகேர் லங்கா நிறுவனமானது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஃப்ளெக்சிகேர் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமாகும்.
15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அறுவை சிகிச்சை கருவிகள், சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களில் 90% ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.