November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பில் ரஷ்யா ஆராய்வு!

இலங்கையில் அணுசக்தி போன்ற புதிய மூலாதாரங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய ரஷ்ய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதுவர் யூரி பி மெட்டேரி மற்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே ஆகியோருக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் விலையுயர்ந்த மின் உற்பத்தி யுக்திகளில் இருந்து விலகி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கக் கூடிய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க முறைகளுக்கு மேலதிகமாக குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்வதற்கான ஏனைய முறைகளுக்கு மாற்றியமைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய வேண்டுமென ரஷ்ய தூதுவர் யூரி பி மெட்டேரி இதன் போது தெரிவித்தார்.

இலங்கையில் எரிசக்தி துறையானது தற்போது புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்களுக்கு மாறி வருவதாக அமைச்சர் லொகுகே தூதுவருக்கு எடுத்துரைத்தார்.

2030 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை 70 வீதத்தால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி நிர்ணயித்த இலக்குகளை நோக்கி அமைச்சு நகர்ந்து வருவதாக சக்தி வளத்துறை அமைச்சர் காமினி லொகுகே மேலும் கூறினார்.