November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதாக ஜப்பான் உறுதி

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கான தமது ஒத்துழைப்பை வழங்குவதாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தென்னாசிய வலயப் பணிப்பாளர் நாயகம் சக்கமொட்டோ டக்கேமா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகத் தான் இருந்தபோது, “ஜெய்க்கா” நிறுவனத்துடன் ஒன்றிணைந்து பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியுமாக இருந்ததாக ஜனாதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

1965ஆம் ஆண்டு முதல், இலங்கையின் 120 அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தனது பங்களிப்புகளை வழங்கியுள்ளது.

கடன் பெக்கேஜ் அபிவிருத்தித்திட்ட உதவிகள், அபிவிருத்தித் திட்டமல்லாத உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கடன் நிதியுதவிகளுக்காக, ஜெய்க்கா நிறுவனத்தினால் 8,829 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

தற்போது “ஜெய்க்கா” உதவியின் கீழ் இலங்கையில் 14 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சக்திவலு, நீர்வளங்கள், நீர்வடிகாலமைப்பு, துறைமுகம், போக்குவரத்து, சுகாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ள இலகுக் கடன்கள், 2,500 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதுவரை செயற்படுத்திய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விவசாயம், திறன் அபிவிருத்தி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்காக, எதிர்வரும் வருடத்தில் “ஜெய்க்கா”வின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.