இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் மூவரினது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன் போது இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வருகை தந்துள்ள இரண்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவராக “பொஜ் ஹான்பொல்” (Poj Harnpol)வும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகராக “சன்டில் எட்வின் சல்க்” (Sandile Edwin Schalk)வும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவராக “ஹிடேகி மிஸுகொஷி” (Hideaki Mizukoshi) இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
இலங்கை மற்றும் தமது நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதியிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றியும், அரசு எடுத்துள்ள முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளிடம் இதன் போது தெளிவுபடுத்தினார்.
எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுதல் மற்றும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் அந்த நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.