சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அவசியமின்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியத் தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற போலி பிரசாரங்களால் மக்கள் பதற்றமடைந்து, வரிசைகளில் நிற்பதாகவும் அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றால் நாட்டு மக்களுக்கு தாம் முன்கூட்டியே அறிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முழுமையான பெட்டோல் தேவையில் 14 வீதமும், டீசல் தேவையில் 29 வீதமும் மாத்திரமே சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் கிடைப்பதாகவும் அதனால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.