July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் பின்னரே மாகாண சபை தேர்தல்’

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையிலும், முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் சூழ்ச்சியினாலும் இப்போதைக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என சபையில் தெரிவித்த மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் கூறினார்.

மாகாண சபை தேர்தலை இன்றைய சூழ்நிலையில் நடத்த முடியாது. அதற்கு முன்னைய அரசாங்கமே காரணமாகும்.ஜனநாயகம் குறித்து பேசுகின்றீர்கள்.ஆனால் உங்களின் செயற்பாடுகள் காரணமாகவே மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதுள்ளது.சிறுபான்மை கட்சிகளே ஆரம்பத்தில் இருந்து மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.அப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஸ வடக்கு, கிழக்கிற்கு மாகாணசபை தேர்தலை நடத்தினார்.தமிழர் பகுதியில் நிருவாக அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.

ஆனால் நல்லாட்சியில் இந்த செயற்பாடுகள் முழுமையாக தடுக்கப்பட்டது.சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாது இரவு 10 மணிவரை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி சூழ்ச்சி செய்தீர்கள்.அதன் தாக்கமே மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதுள்ளதற்கு காரணம்.ஆனால் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவோம்.அதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு.அது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எப்போதுமே மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமே அதிகாரத்தில் இருக்க வேண்டும்.மாறாக ஆயுதத்தால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதை நாம் தொடர்ச்சியாக நம்புகின்றோம்.அந்த நிலைப்பாட்டில் இருந்தே மஹிந்த ராஜபக்ஸ இந்த நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் எமது இராணுவ அதிகாரிகளை ஜெனிவாவிற்கு கொண்டு சென்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுத்தீர்கள்.அவ்வாறு செயற்பட்ட அணியினரே எதிர்க்கட்சியினர்.

அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட ஒரு தலைப்பட்ச பிரேரணையை ஜெனிவாவில் அங்கீகரித்து அப்பாவி இராணுவ வீரர்களை சிறையில் அடைக்கவே நடவடிக்கை எடுத்தீர்கள். விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசும் நீங்கள் நாட்டை மீட்டெடுத்த இராணுவ வீரர்கள் குறித்து பேசவில்லை.சஜித் பிரேமதாச குறித்தும் நான் வருத்தப்படுகின்றேன். சஜித் பிரேமதாசவின் தந்தையின் அரசாங்கத்தில் நானும் அப்போது அங்கம் வகித்தேன், வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திட்டு எமது இராணுவ வீரர்கள் 700 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட காரணமானார். அது குறித்து இன்று ஏதேனும் கூறுகின்றீர்களா? வருத்தமாவது தெரிவித்தீர்களா? அதுதான் நாம் ஐக்கிய தேசிய கட்சியை கைவிட்டு மஹிந்த ராஜபக்ஸவுடன் கை கோர்த்தோம்.இப்போதும் அதுவே இடம்பெற்று வருகின்றது.ஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் தள்ளியமைக்கு இன்று எதிர்கட்சியாக உள்ளவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.