June 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது: வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

அடுத்த ஓரிரு நாட்களில் நாட்டில் ஏற்படக்கூடிய கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக அடுத்து வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் மேலும் கொவிட் பரவல் அதிகரிப்பதை தடுக்க, கொவிட் நடைமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறினார்.

எனவே, வெளியில் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

இதனிடையே நாட்டில் மேலும் 731 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 552,274 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,016 ஆக அதிகரித்துள்ளது.