இலங்கையில் நவம்பர் 16 முதல் 30 வரை பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி இன்றி மறு அறிவித்தல் வரை பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உடற்பயிற்சி நிலையங்களை அதன் கொள்ளளவில் 50 சதவீதத்துடன் இயக்கவும், திரையரங்குகளில் ஒரே சமயத்தில் 25 முதல் 50 வீதமான பார்வையாளர்களை அனுமதிக்கவும் முடியும்.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புகளுக்கு மட்டும் மேலதிக வகுப்புகளை வழக்கமான மாணவர் எண்ணிக்கையின் 50 வீத மாணவர்களுடன் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அத்தோடு பாலர் பாடசாலைகளை முழு திறனுடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் கூட்டுப்பிராத்தனைகள் மற்றும் விழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்ட போதிலும் தனிநபர் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருமண நிகழ்வுகளுக்கு அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவ்வாறே பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மண்டபத்தின் வழக்கமான கொள்ளளவில் அதிகபட்சமாக மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 100 பேருக்கு மேல் அதிகரிக்காது இருக்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும் மதுபானம் வழங்கப்படாமல் திறந்த வெளியில் நடத்தப்படும் திருமண விழாக்களுக்கு 150 பேர் அனுமதிக்கப்படலாம்.
இது தவிர ஏனைய செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவ்வாறே பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.