இலங்கையில் வாய்வழி கொவிட் வைரஸ் தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிராவிர்’ (Molnupiravir) பயன்படுத்தப்படுவதற்கு, கொவிட்-19 தொழிநுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சா் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளாா்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) தமக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன மேலும் தெரிவித்தார்.
குறித்த மருந்தை இலங்கையில் பதிவு செய்து நாட்டில் உள்ள நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மெர்க்கின் ‘மோல்னுபிராவிர்’ கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்து ஆகும்.
இதனை இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் லேசானது முதல் மிதமான கொவிட் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு பயன்படுத்த முதல் தடவையாக அங்கீகாரம் வழங்கியது.
மோல்னுபிராவிர் அல்லது லாகேவ்ரியோ என அழைக்கப்படும் இந்த சிகிச்சை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு கொரோனா தொற்றியதும் பயன்படுத்த இங்கிலாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீவிர நோய் நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் இருக்கும் கொவிட் தொற்றுக்குள்ளான பெரியவர்களில், இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பதற்கான வாய்ப்புகளை பாதியாகக் குறைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வைரஸ் பெருகுவதை தடுப்பதன் ஊடாக உடலில் வைரஸ் அளவைக் குறைக்கிறது. எனவே நோயின் தீவிரத்தன்மையை குறைக்கும் என கூறப்படுகின்றது.
மருத்துவ பரிசோதனை தரவுகளின் படி, நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் மோல்னுபிராவிர் மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அறிய முடிகின்றது.
எனவே, கொவிட் தொற்று உறுதியான மற்றும் அறிகுறிகள் தோன்றிய ஐந்து நாட்களுக்குள் முடிந்தவரை விரைவில் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.