November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியா?; சுகாதார அமைச்சர் சந்தேகம்!

சுகாதார நெறிமுறைகளை மீறி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அண்மையில் நடத்திய போராட்டங்கள், கொவிட் வைரஸை பரப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியா? என சந்தேகிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் என்ற வகையில் அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள தவறியதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாளைய தினம் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், சுகாதார வழிகாட்டுதல்களை மீறி இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க தமது அமைச்சு அனுமதிக்காது என தெரிவித்தார்.

தொற்று நோயைப் பொறுத்தவரையில் நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும் போது, ​​எதிர்க்கட்சிகள் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதை தாம் கடுமையாக விமர்சிப்பதோடு தனது கண்டனத்தையும் வெளியிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை மனித உரிமையின் கடுமையான மீறல் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் வலியுறுத்தினார்.

தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் தொற்றுநோய் காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்தையும் தாங்கள் மன்னிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல இதன்போது கூறினார்.