மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நிதியமைச்சரின் 2022 வரவு – செலவுத் திட்ட உரையானது, திருமண வீட்டில் கதைக்க வேண்டிய கதையை மரண வீட்டில் கதைத்ததைப் போன்றுதான் காணப்பட்டது என்று கூறியுள்ளார்.
நிதியமைச்சரின் ஊடாக மக்களுக்கு ஏதேனும் நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் வரவு – செலவுத் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து அக்கரையில்லாமல் தயாரித்தது போன்றுதான் காணப்படுகிறது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக பேசப்படுகிறது. எனக்கு வயது 31 தான் ஆகின்றது. எனக்கு உண்மையில் ஓய்வூதியம் தற்போது தேவையில்லை. அத்துடன் என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எனும் ஒன்றே தேவையில்லை. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.