
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்திற்கு முன்னால் இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் தெற்காசியாவுக்கான விஜயத்தின் ஒரு அங்கமாக இன்று அவர் இலங்கைக்கு வரவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
”இலங்கைக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் வேண்டாம்” – ”எம்சிசி போன்ற ஆபத்து மிக்க ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படக் கூடாது’’ என்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பான மகஜர் ஒன்றை தூதரகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துநெத்தி, பிமல் ரத்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.