July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையிலேயே ஹட்டன் நகரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகளின்படி ஹட்டன் பிரதேசத்தில்  மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்த அட்டன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரியொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்தது. இதன்படி குறித்த மீன் வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும், அவரின் சாரதிக்கும், அந்த சாரதியுடன் தொடர்பை பேணிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த மீன் வியாபாரியின் மீன் கடைக்கு அருகில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் பணியாற்றிய இருவருக்கும், அவர்களுடன் தொடர்பை பேணிய ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அக்கரபத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்துவிட்டு வீடு திரும்பியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து பிரதேசத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன் நகரத்தை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்க கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.