முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு குறைந்தது 18,000 ரூபா சம்பள அதிகரிப்பினையோ அல்லது கொடுப்பனவையோ வழங்குவதற்கு வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில், வாழ்க்கைச் செலவை ஒப்பிடும் போது, கிடைக்கும் ஊதியம் திருப்திகரமாக இல்லை. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி செலவு மாதம் 58,000 ரூபாவரை உள்ளமை கணக்கிடப்பட்டுள்ளது” என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மாதம் ஒருமுறை சம்பளம் பெறும் அரச ஊழியர்கள், 2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் தமது சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பலமாக எதிர்பார்த்தனர். ஆனால், வரவு செலவு திட்டத்தில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமது கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, அவ்வாறு வழங்காவிடின் முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும் கடிதத்தின் மூலமாக சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.