September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகரிக்கும் கொவிட்: மீண்டும் ஒரு முடக்கத்திற்கான சமிக்ஞையா?

இலங்கையில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள போதிலும் நாளுக்கு நாள் கொவிட் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை மீண்டும் ஒரு நெருக்கடியான காலம் வர இருப்பதை காண்பிப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் எண்ணிக்கையிலும் சிறிது அதிகரிபை அவதானிக்க முடிவதாக சுகாதார அமைச்சின் கொவிட் வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கான 176 சிகிச்சை மையங்களில் 30 சதவீதம் தற்போது நோயாளர்களினால் நிரம்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

” இது ஒரு எச்சரிக்கை மணியே, நிலைமை மோசமாகும் முன் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், நாடு முன்பு போல் மீண்டும் சில மாதங்களுக்கு மூடப்பட நேரிடலாம்” என வைத்தியர் ஹம்தானி கூறியுள்ளார்.

எனவே, நாடு அவ்வறானதொறு இக்கட்டான நிலையை அடையாதிருக்க வேண்டுமானால், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.

இதனிடையே நேற்றையதினம் நாட்டில் 716 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 549,500 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் 22 கொவிட் உயிரிழப்புகள் பதிவான நிலையில், மொத்த இறப்புகளின் எண்ணிக்கையும் 13,972 ஆக உயர்வடைந்துள்ளது.