இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் மாத்திரமே மன்னார் மாவட்டத்தில் வியாபார நிலையங்கள், சந்தைகள், பொதுப் போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15 முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தற்போது மன்னாரில் நிலவும் சீரற்ற காலநிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று அதிகரிப்புக்கு மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது, சுகாதார நடை முறைகளை கடைப் பிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் காரணமாக இருப்பதாக வைத்தியர் ரி.வினோதன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே, குறிப்பிட்ட பணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனரா என்று பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இது வரையில் மாவட்டத்தில் மொத்தமாக 2685 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.